தேர்வு மூலம் நீதிபதிகளை நியமிக்க முடிவு!
நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு
முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 2.78 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. லோக் அதாலத், கிராம சபை கூட்டங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஒரே நாளில் தீர்த்து வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், நீதித் துறையில் மட்டும் வழக்குகள் அதிகளவில் நிலுவையில் இருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் பற்றாக்குறையும், உள்கட்டமைப்பு வசதிக் குறைவும் இதற்குக் காரணம் என நீதித் துறையில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். உயர் நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் காலியாகவுள்ளன; கீழமை நீதிமன்றங்களிலும் 5,400 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதனால், தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகளைத் தகுதி அடிப்படையில் நியமிக்க மத்திய அரசு சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, வேறு முகமையைக் கொண்டோ தேர்வுகளை நடத்தி, காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 6,000 நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் தேர்வு நடக்கவுள்ளது. அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தத் தேர்வு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த
விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்குப் பின்னர் நீதிபதிகள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
No comments
Post a Comment