முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் வருமா ? -பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் பொதுவாக 5 வருடங்களுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுகின்றன. அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவால் பாடத்திட்டம் முடிவு செய்யப்படுகிறது.
பல்வேறு துறை வல்லுநர்களும் பல்வேறு வகுப்பிற்கான பாடத்திட்டத்தினை வரைவு செய்கின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தந்தப் பாடங்களுக்குரிய நூல்களை எழுதுகின்றனர்.
இந்நிலையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, சட்டப்பேரவையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
மேலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2012-2013ம் வருட கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2013-2014ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9 ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்டது. இந்த முறையின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் எழுதும் பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் 1,6,9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதியப் பாடப்புத்தகம் எழுதும் பணிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.
இது
குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது,
'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில் , தற்பொழுது 9ம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10 வகுப்பில் உள்ளது போல் ஒரே புத்தகமாக வழங்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் 8ம் வகுப்பு வரையில் தொடர் மதிப்பீட்டு முறையில் பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பருவத்திற்குரிய தேர்வு பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய பின்னர், 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்து தேர்வு எழுதுவதால் சிரமப்படுகின்றனர். எனவே 9ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை மாற்றலாம் என கூறியுள்ளனர்.
இது
குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து பொதுக்கல்வி வாரியத்தின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.
மேலும், தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்து போது அறிமுகப்படுத்தப்பட்ட 9 ம் வகுப்பு முப்பருவமுறை திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment