Header Ads

Header ADS

தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்



விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கு தீபாவளியை முன்னிட்டு பட்டாசு பார்சல் மற்றும் புத்தாடை வாங்கிக் கொடுத்து பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் தலைமையாசிரியர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது.இப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், இலவசமாக யோகா, கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார்.
இங்கு படிக்கும் ஏழைக் குழந்தைகள் கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கலுக்கு புத்தாடைகள் எடுத்து கொண்டாடுவார்கள். மேலும் பெற்றோர் அனைவரும் தினக் கூலிகள். தீபாவளிக்கு அரிதாக புத்தாடை எடுப்பதாக மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து தனது மாணவ மாணவியருக்கு புத்தாடை மற்றும் பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளியை அவர்களை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு தலைமை ஆசிரியர் முடிவு செய்து அவர்களுக்கு இவற்றை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனை வழங்கும் விழா பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கா.மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை கா.ரோஸ்லினா வரவேற்றார்.
மாணவ மாணவியருக்கு கல்வித் துறை அறிவித்துள்ளபடி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. பின்னர் அனைத்து மாணவ மாணவியருக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் பேசுகையில், தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மாணவர்களுக்கு பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும என அறிவுறுத்தியுள்ளார்கள். இதன் பேரில் இப் பள்ளியில் இந்த விழிப்புணர்வு செயல் விளக்கம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் துறை, தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளில் அளிக்கப்பட்ட தெளிவான அறிவுரைகளின்படி தீபாவளி விபத்துக்கள் வெகுவாக குறைந்தது தெரியவந்துள்ளது. மாணவர்கள் முறையாக, கவனமாக பட்டாசுகளை வெடித்து விபத்துக்கள் அற்ற, மகிழ்ச்சி நிறைந்த தீபாளியைக் கொண்டாட வேண்டும் எனறார்.

நிகழ்ச்சியில் பெற்றோர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் நன்றி கூறினார்
 




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.