Header Ads

Header ADS

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது?



தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது?

 உரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்போது, தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய கணினி ஆசிரியர் பணியிடங்களை இதுவரை நிரப்பாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பவர்களின் அடுத்த வாய்ப்பாக கணினி அறிவியல் படிப்பு இடம் பெற்றிருக்கிறது. அறிவியல் பாடப்பிரிவில் கணினி அறிவியல் பிரிவு இருப்பது போல, கலைப் பிரிவில் கணினி அறிவியல் பயன்பாடும், தொழில்பிரிவில் கணினிப் பயிற்சியும் முதன்மைப் பாடமாக இருக்கிறது. எனவே எல்லாவற்றிலும் கணினி அறிவியல் படிப்பு இல்லாமல் இல்லை என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கணக்கெடுப்பின்படி, 6 முதல் பிளஸ் 2 வரையிலான மேல்நிலைப் பள்ளிகள் 4,206, 1 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் 2,873 இருப்பதாக தெரிவிக்கிறது. இதில் கணினி அறிவியல் வகுப்புகள் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களில் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக ரூ.4000 ஊதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், தங்களுக்கு சிறப்புநிலைகருதி, பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியிடம், வேலையில்லா கணினிப் பட்டதாரி ஆசிரியர்கள் முறையிட, அதைத் தொடர்ந்து, கடந்த 2007 ஆம் ஆண்டில், இவர்களுக்கு சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தி, பணியிடங்களை நிரப்ப முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்.
அதன்படி, சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டதில் 1348 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று முறையான பணி நியமனத்தை பெற்றனர். எஞ்சிய 652 பேர் தேர்வு பெறாத நிலையில் அவர்கள் பணியிலிருந்து வெளியேறிய நிலையில், தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை முறையிட்ட வழக்குகளின் மூலமாக இந்த 652 பேருக்கும் பணி வழங்க கடந்த 2016 ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தியும்வாய்ப்பு இல்லை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களும் அறிவிக்கப்படும். அவ்வாறு 2017-18 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், அந்தப் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய 765 கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் கணினி அறிவியலில் எம்.எஸ்.சி.பி.எட் முடித்து வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியர்கள்.
இதுவரைநாள் வரை கணினி அறிவியல் படிப்பை வழங்கும் ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பிரிவில் தொழில்கல்வி ஆசிரியர் ( கணினிப் பயிற்றுநர்) என்று கருதிதான் அழைக்கப்பட்டு வந்தனர். தற்போது கணினி அறிவியல் படிப்பு முதுகலை ஆசிரியர் பணியிட நிலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களை நியமிக்கும் நிலையும் வந்துள்ளது.
இந்த நிலை மாறுவதற்கு முன்பு நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு கூடஎழுத இயலாத நிலையில்தான் இருந்தோம். தற்போது முதுகலை ஆசிரியர் என்ற நிலைக்கு நாங்கள் வந்து இருக்கிறோம். ஆனாலும் எங்கேயும் வாய்ப்பு என்பது இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விட்டுப் போய்விடக்கூடாது என்று கருதி அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ரூ.4000 ஊதியத்தை பி.எஸ்.சி. எம்.எஸ்.சி. படித்தவர்களைக் கொண்டு கணினி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். கணினி அறிவியிலில் எம்.எஸ்.சி .பி.எட் முடித்த 54,000 பேர் பணியில்லாமல் தவிக்கும் நிலையில், அரசு எங்கள் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருப்பது ஏன்தான் என்பது தெரியவில்லை.
தொடர்ந்து புறக்கணிப்பு ஏன் ? : தற்போதைய புதியப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 வகுப்புகளுக்கானபாடத்திட்டங்கள் கல்லூரிகளில் உள்ள நிலைக்கு இருக்கிறது. அந்த நிலையில் உள்ள பாடத்திட்டத்தை உரிய கல்வித் தகுதி உடையவர்களைக் கொண்டு நடத்தினால்தான் மாணவர்களின் கல்வி மேம்படும். தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பலவற்றில் 5 ஆண்டுகளைக் கடந்தும் கூட கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலைதான் காணப்படுகிறது.

தமிழக அரசு அண்மையில் 1600 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ரூ.7500 தொகுப்பூதியத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது என்ற விவரத்தையும் அறிவித்து,. அதற்கான அரசாணையும்கூட வெளியிட்டது. தமிழ், ஆங்கிலம்,இயற்பியல், விலங்கியல் போன்றப் பாடப்பிரிவுகள் இருந்தாலும் அதிலும் கணினி அறிவியல் பாடம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

எங்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு முறையாக பணிவாய்ப்பு, ஊதியம் போன்றவற்றை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பல்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை உரிய முறையில் கவனத்தில் கொண்டு நிரப்ப வேண்டும் என்கின்றனர் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் யு.ராமச்சந்திரன் மற்றும் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பி. வேல்முருகன்.
1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ரூ.4000 ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, அதன் பின்னர் சிறப்பு நுழைவுத்தேர்வெழுதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களைத் தவிர, கடந்த 11 ஆண்டுகளாக முறையான பணி நியமனம் செய்யப்பட்டாமலேயே இருக்கிறது.

நாங்களும் மற்றப் பாடங்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களைப் போன்று சிறப்பாகத்தான் பாடம் நடத்துகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கையைத்தான் அரசுகவனத்தில் கொள்ளாமல் இருப்பது ஏனோ என்கின்றனர் இவர்கள்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.