விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை... பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் சர்ச்சை!
ஒவ்வோர் ஆண்டும் மே மாத கோடை விடுமுறைக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் முதலாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். தற்போது விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருப்பது, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவில், `பள்ளியைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 5 வயது பூர்த்திசெய்துள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே விலையில்லாப் பாடப்புத்தகம், சீருடைகளை வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்... ``விஜயதசமி அன்று 2 வயது பூர்த்தியான குழந்தைகளை, கோயிலில் அல்லது வீட்டில் நெல் அல்லது அரிசி பரப்பி அதன் மேல் எழுதவைக்கின்றனர். இது, நம்பிக்கையின் பெயரில் நடக்கிறது. அன்று பிள்ளைகள் படிக்கத் தொடங்குகின்றனர். அவர்கள் வளர்ந்த பிறகு பள்ளியில் சேர்கின்றனர். இந்த நம்பிக்கையையும், பள்ளியில் பிள்ளைகள் சேர்ப்பதையும் போட்டு அரசுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
விஜயதசமி அன்று அரசுப் பள்ளியில் சேர்க்கை நடத்தினால், அதே நாளில் தனியார் பள்ளிகளிலும் பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்பில் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள். ஏற்கெனவே ஜூன் மாதம் சேர்க்கை நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை அவர்களைச் சேர்க்கை நடத்தவைப்பதுபோல் இருக்கிறது. அரசுப் பள்ளியில் பல்வேறு சமூகச் சூழலில் இருக்கும் குழந்தைகளே சேர்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் அதுபோன்ற நிலை இல்லை. தனியார் பள்ளிகள் வணிகரீதியாகத்தான் இயங்குகின்றன. கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்கும்போது நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்வார்களா? இதை யார் கண்காணிப்பது என்பதெல்லாம் பள்ளிக்கல்வித் துறை யோசிக்க வேண்டும்.
அரசு,
`ஜூன்
மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். கல்வியாண்டின் முதல் நாளில் பிள்ளைகளைச் சேருங்கள்' என்று சொல்லலாம். ஆனால், பிள்ளைகளை விஜயதசமி அன்றோ அல்லது ஜூன் 1-ம் தேதி அன்றோ சேர்க்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியாது. தனிமனித உரிமையின் அடிப்படையில், அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் என்றைக்கு வேண்டுமானாலும் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.
2010-ம் ஆண்டிலிருந்து பள்ளிகள் கடைப்பிடித்துவரும் கல்வி உரிமைச் சட்டத்தில், 365 நாளில் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேர்க்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேளையில், குறிப்பிட்ட ஒரு தேதியில் பிள்ளைகளைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பது அவசியமில்லாதது.
கல்வி உரிமைச் சட்டத்தில், 6 வயது முதல் 14 வயது வரை பிள்ளைகள் கட்டாயம் பள்ளிக் கல்வி பெற வேண்டும் என வரையறுத்துள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் அல்லது பணியில் இருக்கக் கூடாது. இவ்வாறு இருந்தால் கல்வி ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம். இவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இதரச் சான்றிதழ்கள் இருந்தால்தான் பிள்ளையைப் பள்ளியில் சேர்ப்பேன் எனச் சொல்ல முடியாது. பள்ளியில் சேர்ந்த பிறகு பிறப்புச் சான்றிதழையும் இதரச் சான்றிதழ்களையும் எப்படிப் பெற வேண்டும் என ஆலோசனை வழங்க வேண்டும்.
`செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்காவிட்டால் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள், பிற பள்ளிகளுடன் இணைக்கப்படும்' என்று தமிழக பள்ளிக் கல்விச் செயலர் அறிவிக்கிறார். ஆனால், தற்போது பள்ளிக்கல்வித் துறை சார்பில் அக்டோபர் 19-ம் தேதிக்குள் பிள்ளைகளைச் சேருங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமானது என்று தெரியவில்லை" என்றார்.
மாணவர் சேர்க்கை கல்வியாளர் மூர்த்தி
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, ``அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மே மாதத்தில், பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் பள்ளி வயதுக் குழந்தைகள் கணக்கெடுப்பை ஆசிரியர்கள் மேற்கொள்கிறார்கள். தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதி இல்லாத மக்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் விஜயதசமி நாளன்று குழந்தைகளைச் சேர்க்க எந்தப் பெற்றோரும் காத்திருப்பதில்லை.
அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டிய கல்வி நிறுவனங்களே மத நம்பிக்கைகளை முன்னிறுத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதை கைவிட வேண்டும். மதச்சார்பற்ற அரசாட்சி முறையில் கல்வி நிறுவனங்களில் மதநம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதிக்கக் கூடாது" என்றார்.
தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்புசாமி, `` `பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியில் 5 வயது பூர்த்தியான இன்னமும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளை அடையாளம் கண்டு விஜயதசமி அன்று அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்' என்று உத்தரவிட்டிருந்தோம். பல பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடந்துள்ளது. விஜயதசமி அன்று எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களைத் தொகுத்துவருகிறோம். அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.
மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் படிக்கும் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க முடியாது என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை மாணவர்கள் சேர்க்கையில் பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்துவரும் நிலையில், அந்த நடவடிக்கையால் தனியார் பள்ளிகள் ஆதாயமடைவதையும் தடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது
No comments
Post a Comment