*ஏன் குறைந்தது? - அரசுப்பள்ளிகள் ஓர் அலசல்* - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 27, 2018

*ஏன் குறைந்தது? - அரசுப்பள்ளிகள் ஓர் அலசல்*


 SURESHBABU C
 வெ.வித்யா காயத்ரி
 வி.எஸ்.சரவணன்



 ‘`அரசுப் பள்ளியில் உங்க குழந்தைகளைச் சேர்க்காததற்குக் காரணம் அடிப்படை வசதிகள் இன்மையா, கல்வித் தரமா, சிலபஸா?”



“எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். கீழ்ப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸில் படிக்கிறாங்க. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஸ்கூல் இருக்கிறதால, எந்தப் பிரச்னையும் இல்ல. நாங்க அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கணும்னு யோசிச்சுகூடப் பார்த்ததில்லை. அந்த ஐடியா இருந்தாதானே, அடிப்படை வசதி, தரம் பத்தியெல்லாம் யோசிக்கிறதுக்கு?” என்கிறார் சென்னையைச் சேர்ந்த வனிதா.


அனிதா பிரகாஷ் தன் மகனுக்கு அரசுப் பள்ளியை நிராகரித்த காரணம் வேறு. இவரும் சென்னையைச் சேர்ந்தவர்தான். “என் சொந்த ஊர் தஞ்சாவூர். அங்கே உள்ள அரசுப் பள்ளியைப் பற்றித் தெரியும். ஆனா, சென்னையில் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்னு தெரியாது. அதனால அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டாம்னு முடிவு பண்ணினோம். இப்போ என் பையன் சிபிஎஸ்இ சிலபஸ் ஸ்கூல்ல எல்கேஜி படிக்கிறான். ஒருவேளை அவனை ஸ்கூல் மாற்றினாலும், அப்போதும் தனியார் பள்ளிதான் எங்க சாய்ஸா இருக்கும்’’ என்கிறார்.

அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது குறித்து யோசிக்கவே செய்யாத தலைமுறை வந்துவிட்டது. இதன் விளைவே, ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருவது.  சில மாதங்களுக்கு முன்பு கல்வித்துறையின் அறிவிப்பு ஒன்றில், கடந்த இரண்டு வருடங்களில் அரசுப் பள்ளிகளிலிருந்து 1,40,000 மாணவர்கள் வெளியேறியதாகக் குறிப்பிட்டிருந்தது.


நம் விகடன் இணையதளத்தில், ‘உங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா, தனியார் பள்ளியில் சேர்ப்பீர்களா?’ என்று பெற்றோர்களிடம் நடத்திய சர்வேயில், 47% பேர் தனியார் பள்ளியில் என்றும், 28% பேர் அரசுப் பள்ளியில் என்றும், 25% பேர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். அரசுப் பள்ளியைத் தவிர்ப்பதற்கான காரணங்களாக, ஆங்கிலம் சரளமாகப் பேசும் பயிற்சி கிடைக்காது என்று 40.2% பேரும், ஆசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்துவதில்லை என்று 30% பேரும் கூறியுள்ளனர். அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளை படிப்பதை உறவினர்கள் கேலி செய்வார்கள் என்பதால் தவிர்த்ததாக 9.8% பேர் கூறியுள்ளனர்.

‘` *துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்களா?”*

“ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை பயிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்களா என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது பெற்றோர்களின் நியாயமான கோரிக்கைதான். இதுபோன்ற அத்தியாவசியத் தேவைகளைக்கூட அரசாங்கம் முழுமையாகச் செய்துகொடுக்காத பட்சத்தில், பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் மாணவர்களை எப்படிச் சேர்ப்பார்கள்? தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்விச் செயலாளர் தன் பிள்ளையை அடிப்படை வசதிகள் இல்லாத இதுபோன்ற பள்ளியில் சேர்ப்பாரா?” என்கிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.


“அடுத்ததாக, வகுப்பு வாரியாக, பாட வாரியாக ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. இப்படியான சூழ்நிலையில் பெற்றோர்கள் எப்படி தங்கள் குழந்தைகளை விரும்பி அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள்?  என்னைப் பொறுத்தவரையில் முதலில் அரசாங்கம் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றினால் மட்டுமே, மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும்” என ஆதங்கத்தோடு கூறுகிறார்.

‘` *10 வயதுக்குக் கீழ் தாய்மொழிக் கல்வியே சரி!’’*

“இதற்குக் காரணம் அரசின் செயல்பாட்டுக் குறைவு மட்டுமல்ல, பெற்றோரின் ஆங்கில மோகமும்தான்’’ என இந்தச் சிக்கலின் வேறொரு பரிமாணத்தை விளக்குகிறார் பேராசிரியர் பிரபா கல்விமணி. “உலகம் முழுவதுமே குழந்தைகளுக்கு 10 வயதுக்கு மேல்தான் இரண்டாவது மொழியை அறிமுகப்படுத்து கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதுமே இரண்டு மொழிகளையும் கற்பிக்கத் தொடங்கிவிடுகிறோம். உண்மையில், குழந்தை தாய்மொழியில் படிக்கும்போதுதான் உண்மையான கற்றலை உணரும். வேறு மொழியில் படிக்கும்போது, கற்றல் பின்தள்ளப்பட்டு, மனப்பாடம் மட்டும்தான் செய்யும். மனப்பாடம் செய்வதால் கல்விக்கான தேவையை அது புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலம் என்பது இரண்டாவது மொழிதான். தொடக்கப்பள்ளியில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழிப்பாடமாகத்தான் படிக்கிறோம். அப்படிப் படிக்கும்போது இயல்பாகவே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தொடங்கிவிடலாம். ஆனால், ஆங்கில மோகத்தால், ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே கௌரவம் என்று நினைக்கும் பெற்றோர்கள், அதற்காகவே பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். தாய்மொழிக் கல்வி மூலம் அனைத்தையுமே நம்மால் சாதிக்க முடியும்.


தொடக்கக் கல்வியில் இரண்டாம்பட்சமாக இருக்கும் ஆங்கிலம், இன்றைய சூழலில் மேல்நிலைக் கல்வியிலும், இளநிலை, உயர்நிலைக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அதிக முக்கியத்துவம் பெறுவதையும் பேச வேண்டும்.

உயர்கல்விக்கான வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவானது எனச் சொல்லப்பட்டாலும், அதன் நுழைவுவாயில் பொதுவானதாக இல்லை. என்றாலும் இனி இதுதான் நடைமுறை என்பதால், இதை அரசுப் பள்ளிகள் கருத்தில்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

 *‘`கல்வி வணிகம்!”*

பள்ளிக்கல்வி குறித்துத் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வரும் பேராசிரியர் மணி, “கல்வியில் தனியார் நுழைந்ததுமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து கொண்டேதான் வருகிறது. கல்வி, சேவையிலிருந்து வணிகமாகி விட்டது. பொருளாதாரத்தில் நிறைவடைந்தவர்கள் தனியார் பள்ளியை நோக்கிச் சென்றனர். பிறகு படிப்படியாக, கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் எனும் மனநிலைக்கு நடுத்தரப் பொருளாதாரம் கொண்டவர்க ளும் வந்துவிட்டனர். இதில் மீதமிருப்போர் அடித்தட்டு மக்கள் வீட்டுக் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிள்ளைகள்தாம். ‘அவர்களோடு எங்கள் பிள்ளைகள் சேர்ந்து படிப்பதா...’ எனும் சாதிய எண்ணம் நிலவுவதையும் மறுத்து விட்டுப் பேச முடியாது. பொருளாதாரக் காரணத்துடன் கெளரவம், சாதியமும் இதில் இருக்கிறது.

 *அரசுப் பள்ளிகளில் கேஜி வகுப்புகள்!*

போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதால் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கவில்லை எனப் பெற்றோரும், மாணவர் சேர்க்கை அதிகம் இல்லை என்பதால் ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பவில்லை என அரசும் சொல்லி வருகிறது. மாணவர்கள் தனியார் பள்ளிக்குள் நுழைவதே கேஜி வகுப்புகள் வழியாகத்தான். அவை முடிந்ததும் அப்படியே தொடர்ந்து விடுகின்றனர். இதை மாற்ற, அரசுப் பள்ளிகளில் கேஜி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அங்கன்வாடி மையங்களை அப்பகுதியின் பள்ளிகளோடு இணைக்க வேண்டும்.


‘எட்டாம் வகுப்புவரை ஆல் பாஸ் என்பதால் கல்வித் தரம் குறைகிறது; அதனால் பெற்றோர் அரசுப் பள்ளியை நிராகரிக்கிறார்கள்’ என்று சிலர் சொல்கிறார்கள். இது தனியார் பள்ளியால் உருவாக்கப்பட்ட கருத்து. யாரையும் ஃபெயில் ஆக்கக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, கற்பிக்காமல் இருக்கச் சொல்லவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் அதற்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், மாணவரை ஃபெயிலாக்குவதால் அவரின் கற்றல் மேம்படாது என்றே பல ஆய்வுகள் சொல்கின்றன. ‘பள்ளி மேலாண்மைக் குழு’ என்பது பெயரளவில் இருக்கிறது. அதை முறையாக நடை முறைப்படுத்தினால், அந்தந்தப் பள்ளிகளின் அடிப்படைப் பிரச்னைகள் தீரும். அரசு அதிகாரிகளின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைப்பது கட்டாயமாக்கப்படுவது இதற்குத் தீர்வாகுமா எனக் கேட்டால், பல வழிகளில் அதுவும் ஒன்று.


 *ஹீரோ ஆசிரியர்கள்!*

மாணவர்களைச் செதுக்குவது நல்ல ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர் அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுக்கும்போது மாணவர்கள் ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்வார்கள். சமீபத்தில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலுக்கு எதிராக அப்பள்ளியின் மாணவர்கள் கண்ணீருடனும், பெற்றோர்கள் போராட்டத்திலும் நின்றதைப் பார்க்கும்போது, தனியார் பள்ளிகளைவிடவும் பயிற்சி பெற்ற, தகுதியுள்ள ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில்தான் இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்த  முடிகிறது.  மேலும், தங்கள் பள்ளியின் கட்டட வசதி, தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்டவற்றைத் தங்கள் சம்பளத்திலிருந்து வாங்கிவைக்கும் ஆசிரியர்களும் பலர் இருக்கின்றனர். சில ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைப் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வைப்பவர்களாக, போட்டிகளுக்காக வெளிநாடுவரை செல்ல உதவுபவர்களாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. அதுபோன்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் செயல்படும் தன்மையை அறிந்து, தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றும் விதத்தில் அதை ஒரு திட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது’’ என்கிறார் பேராசிரியர் மணி.

அரசுப் பள்ளிகளைக் காப்பதன் மூலமே அடுத்த தலைமுறைத் தமிழகம் வெற்றி நோக்கிச் செல்லும்.

 *கேரளாவுக்கு வாழ்த்துகள்!*

கேரள அரசு முன்னெடுத்த  ‘பொதுக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கட்டடம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் புதிய மாற்றம் கண்டன. அதன் விளைவு, கடந்த ஆண்டில் வழக்கத்தைவிடவும் 1,45,000 மாணவர்கள் அதிகமாக அரசுப் பள்ளியை நோக்கி வந்தனர். இந்தக் கல்வி ஆண்டில் அது இரண்டு லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 *ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு!*

பதினொன்றாம் வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துவதால், போட்டித் தேர்வுகளில் பதினொன்றாம் வகுப்புப் பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளை மாணவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. இந்தச் சிக்கலுக்கு, கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் சரியான தீர்வினைக் கொண்டு வந்தார். அதுதான், பதினொன்றாம் வகுப்புத் தேர்வைப் பொதுத்தேர்வாக நடத்துவது. இப்படி பள்ளிக் கல்வியில் உள்ள ஒவ்வொரு குறைபாட்டையும் சீராக்கினால், அரசுப் பள்ளிகள் இன்னும் அதிக அளவிலான மாணவ வெற்றியாளர்களை உருவாக்கும். ஆனால், தற்போது பதினொன்றாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை உயர்கல்விக்குக் கணக்கில் எடுத்துகொள்வதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது மீண்டும் பின்னடைவே!

No comments: