Header Ads

Header ADS

உயிரிழந்த மாணவரின் வங்கிக் கடனை செலுத்திய அதிகாரிகள்!


உதகையில் வங்கியிலிருந்து கல்விக் கடன் பெற்று மாரடைப்பால் உயிரிழந்துவிட்ட மாணவரின் மீதிக் கடனைக் கட்டிய அதிகாரிகளின் மனிதநேயமிக்க செயல் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகன் பாலமுரளி. இவர் உதகையிலுள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.1.3 லட்சம் கல்விக் கடனாகப் பெற்று பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவரது தந்தை ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், பாலமுரளியின் படிப்புக்குத் தாய் மட்டுமே உதவியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், பாலமுரளி தான் வாங்கிய வங்கிக் கடனில் ரூ.30,000 மட்டுமே திருப்பி செலுத்தியுள்ளார். மீதிக் கடனை உடனடியாக கட்ட வேண்டுமெனக்கோரி அவருக்கு ஓரியண்டல் வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், பாலமுரளி திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் வங்கிக் கடன் ரூ.1 லட்சத்தை யாராலும் திருப்பிக் கட்ட முடியாத சூழல் உருவானது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான வடமலையின் பரிந்துரையின் பேரில் வாராக்கடன் தொடர்பான மத்தியஸ்த கூட்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வங்கியின் மேலாளர் பிரேம், பாலமுரளியின் வழக்குரைஞரும் நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவருமான ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், பாலமுரளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய ரூ. 1 லட்சத்தில் 90 ஆயிரத்தை தள்ளுபடி செய்து விடுவதாக வங்கி மேலாளர் பிரேம் அறிவித்தார். இருப்பினும், மீதமுள்ள 10,000 ரூபாயை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்ததால் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார், வழக்குரைஞர் ஸ்ரீஹரி , வங்கி மேலாளர் பிரேம் ஆகிய மூவரும் சேர்ந்து பாக்கி தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தி மாணவரையும், அவரது தாயாரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்தனர்.

மனிதநேயமிக்க இச்செயலால் பாலமுரளியின் தாயார் சாந்தியின் கண்களிலிருந்து மட்டுமின்றி உதகை நீதிமன்றத்துக்கு வந்திருந்த பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.