கண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சுவர்கள்: விடுமுறை நாட்களில் இலவச சேவையாற்றும் ஓவியர்கள்
புதுச்சேரியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, 16 ஓவியர்கள் கைகோர்த்து சுவர்களை ஓவியங்களாக்கி வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் இலவசமாக தாமே முன்வந்து இந்தப் பணியை செய்யும் இவர்கள், அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை தங்கள் பணியை விரிவுப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் ஏராளமான ஓவியர்கள் உள்ளனர். பலரும் தங்கள் திறனை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் அரசு பள்ளிகளின் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், தொடர்ந்து மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்களை பள்ளிச் சுவர்களில் இலவசமாக வரைந்து தருகிறார்கள். இப்பணியில் ஆர்வமுடன் விடுமுறை நாட்களில் ஈடுபடும் எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைவர் முனிசாமி கூறியது.
எங்கள் அமைப்பில் துணைத்தலைவர் மகேசன், செயலர் ராஜூ கண்ணன் உட்பட 16 ஓவியர்கள் ஒன்றிணைந்து அரசு தொடக்கப்பள்ளிகளின் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து தருகிறோம்.
குறிப்பாக கிராமப் பகுதிகளில் கூனிச்சம்பட்டு, கிருமாம்பாக்கம் தொடங்கி நகரப் பகுதிகளில் புதுபாளையம், சோலைநகர் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஓவியம் வரைந்துள்ளோம்.
தற்போது ஆண்டியார்பாளையம் அரசுதொடக்கப்பள்ளியில் ஓவியம் வரைந்து வருகிறார்கள்.
நாங்கள் முதலில் வரைந்ததுகூனிச்சம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி தான்.
இப்பள்ளி தான் தற்போது தூய்மைக்கான தேசிய விருது பெற்றப் பள்ளி.
இப்பள்ளியின் பொறுப்பாசிரியர் சசிகுமார் எங்களை அணுகியபோதுதான் முதலில் குழந்தைகளை கவரும் வகையில் விலங்குகள், கார்டூன் உருவங்கள், அறிவியல் சாதனங்கள் என வரைந்து கொடுத்தோம்.
அதையடுத்து கிராமப் பகுதிகளில் அரசு தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை கவரும் வகையில் ஓவியங்களை தொடர்ந்து வரைய ஆரம்பித்தோம்.
கல்வி தனியார்மயமாகும் சூழலில் கிராமப்பகுதிகளில் கல்வி யின் தேவை அதிகரித்துள்ளது.
பெற்றோர் அரசு பள்ளிகளை நாடி வந்து சேர்க்கவும், குழந்தைகள், பெற்றோரின் கவனத்தை அரசு பள்ளிகளின் பக்கம் திருப்பவுமே 2013 முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.வண்ணங்களை ஆசிரியர்கள் வாங்கி தந்து விடுவார்கள். நாங்கள் இலவசமாக வரைந்து விடுவோம். எங்களின் முதல் கவனமே கிராமப் பள்ளிகள்தான்.
தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஓவியம் வரைந்து தந்துள்ளோம். தவளக்குப்பம், லாஸ்பேட்டை, கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுவர்களில் எங்கள் ஓவியம் உள்ளது.
அரசு
இலவசமாக வழங்கும் கல்வியும், மருத்துவமும் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்கிறார்.
No comments
Post a Comment