வகுப்பில் செல்போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 10, 2018

வகுப்பில் செல்போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


Image result for mobile images
ஆசிரியர்கள் க்யூ.ஆர். கோடு பாடம் நடத்தும் போது மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும். அதை தவிர்த்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தெரிந்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபியில் உள்ள பி.கே.ஆர். மகளிர் கல்லூரி சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், முதியவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை தொடங்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் எடுக்கப்படும் முடிவு பற்றி முதலமைச்சருக்குத்தான் தெரியும்.
 
பள்ளியில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை உள்ளதால் ரோட்டரி கிளப் மூலம் நவீன கழிப்பறை சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் சோதனை முறையில் செயல்படுத்தப்படும். இந்த பணியை அரசு அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடமும் பேசி வருகிறோம். புதிய பாடதிட்டம் கூடுதல் பணிச்சுமையாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடதிட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
 அதன் மூலம் மாணவர்கள் அறிவுத்திறன் மேம்படுத்தப்படும். க்யூ.ஆர்.கோடை பயன்படுத்தும் போது மட்டுமே ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்த வேண்டும். அதை தவிர்த்து வகுப்பில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தெரிந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். திருப்பூர் எம்.பி. சத்தியபாமா உடனிருந்தார்.

No comments: