Header Ads

Header ADS

பள்ளிக்கல்வித் துறை - கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!




தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சியை தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அளித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, நிதியை எவ்வாறு பயன்படுத்துவது, மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள் கல்வி அறிவை அதிகரிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி 5 நாட்கள் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் இணை இயக்குனர்கள், 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், அரசு பள்ளிகளின் தற்போதையநிலை, மாணவர்களுடைய எண்ணிக்கை, மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டன. குறைந்த மாணவர்களை கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்தும், சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 1,053 ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்-ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தல், ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்பன ஆய்வில் முக்கியமானவை ஆகும்.

2017-2018-ம் ஆண்டில் 10 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள 36,930 மாணவர்களில் 35 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த குறையை சரிசெய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்ப பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். இதில் 32 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 249 பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அப்படி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காத தொடக்கப் பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.