Header Ads

Header ADS

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இயற்கை வழிகள்!


‘‘உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று.

நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. அதேநேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ரவிச்சந்திரன் அதுபற்றி முக்கியமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...
* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.

* உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

* நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் நிலம் மற்றும் நீர் கபம் என்பதாகவும், நெருப்பு என்பது பித்தமாகவும், வான்வெளி மற்றும் காற்று வாதம் எனவும்
வகைப்படுத்தப்படுகிறது.

* வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும். இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற் சூடு பிரச்னை வரும். இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறையும் உட்கொள்ளும் உணவுகளும்தான்.

உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னையை உண்டுபண்ணும்.

உடற்சூட்டை அதிகரிக்கும் உணவுகள்
புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.

உடல் வெப்பத்தை சீராக வைத்துகொள்வதற்கான உணவுகள்
உடற்சூடு பிரச்னை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
உடற்சூட்டை குறைக்க அன்றாடம் அவசியமான உணவுகள்
தண்ணீர், மாதுளை ஜூஸ், வெந்தயக் குடிநீர், பசுநெய், நீர் மோர், புதினா டீ போன்றவைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

உடற்சூட்டை தணிக்கும் சுய சிகிச்சை முறை

தினமும் காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வாரம் ஒருமுறையேனும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம். உடல் முழுக்க சந்தனம் பூசிக் குளிக்கும் முறையும் பலன் தரும். மேலும், உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை விரதம் என்கிற முறையிலும், பேதி என்கிற முறையிலும் வெளியேற்றி உடல் சூட்டில் இருந்து நலம் பெறலாம்.
உடல் சூட்டை தணிக்கும் மூலிகை மருந்துகள்
சந்தனம், வெட்டிவேர், நல்லெண்ணெய், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மூலிகைக் குடிநீரான சடங்கபானியம், கீழாநெல்லி இவைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது நல்லது.
- . இளஞ்சேரன்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.