ஒரே மாவட்டத்தில் 92 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் ஒரு வகுப்புள்ளவற்றுக்கு ரூ.10 ஆயிரமும், இரு பிரிவு வகுப்புகளைக் கொண்ட பள்ளிகளுக்கு ரூ.17 ஆயிரமும் என பராமரிப்புச் செலவு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தலைவராகக் கொண்ட மேலாண்மைக் குழுவினர், இந்த நிதி மூலம் குடிநீர், மின் சாதனங்கள், கழிப்பறைகள், எழுதும் பலகைகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதேபோல் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது.
ஆனால், நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டமானது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக (சமக்ர சிக்ஷா) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு நிதி ரத்து செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் 959 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் ஊராட்சிப் பள்ளிகள் 653, மாநகராட்சிப் பள்ளிகள் 26, நகராட்சிப் பள்ளிகள் 8, கள்ளர் பள்ளிகள் 104, சமூக நலத்துறை பள்ளி 1, உதவி பெறும் பள்ளிகள் 159 ஆகியவை அடங்கும்.
இப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்-மாணவர் விகிதமானது 1:18 என்ற அளவில் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால், 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புற பள்ளிகளாக உள்ளன. மாநிலம் முழுவதும் இது போல் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் நிதியை இழக்கும் நிலையில் உள்ளன.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளாகவே தொடக்கப்பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதியை முறையாக செலவிடவில்லை என்ற புகார் எழுந்தது.
அதனடிப்படையிலே தற்போது மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி நிதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கூடுதலாக்கி நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், கிராமப்புறங்களிலும் தற்போது தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகவே, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பகீரத முயற்சிக்குப் பிறகே நடைபெறுகிறது.
ஆனால், பராமரிப்பு நிதியை மறுப்பது என்பது அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான வழியையே ஏற்படுத்தும் என்கின்றனர்.
No comments
Post a Comment