Header Ads

Header ADS

60 மாணவர்களை தனியார் பள்ளிகளிருந்து ஈர்த்த திருவாடனைப் பகுதி அரசுப் பள்ளி!


மாணவர்கள் காலையில் 9 மணிக்குப் பள்ளிக்குள்ளே வந்துட்டாங்கன்னா, சாயந்தரம் வரைக்கும் அவங்க எங்க வீட்டுப் பிள்ளைகள்" எனப் புன்னகையுடன் தொடங்குகிறார், நம்புதாளை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெ.ஜான் தாமஸ்.

 

திருவாடனை ஒன்றியம், தொண்டி அருகே உள்ளது நம்புதாளை கிராமம். பல அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஒற்றை இலக்கத்துக்குச் செல்லும் நிலையில், இந்தப் பள்ளியில் 408 மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கலந்த செய்திதானே. இது எப்படிச் சாத்தியமானது?

 

``எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான வேலைகளை ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுவோம். பள்ளியில் என்னென்ன வசதிகள், அரசு கொடுக்கும் விலையில்லா பொருள்கள் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை நோட்டீஸாக அடித்து, வீடு வீடாகச் சென்று அளிப்பது எங்கள் ஆசிரியர்களே. ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீடுகளில், அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்திப் பேசுவார்கள். எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அணுகுமுறையிலேயே பலரும் சம்மதித்துவிடுவார்கள். குழப்பத்துடன் இருக்கும் ஒரு சில பெற்றோர்களை, நானே நேரில் பார்த்துப் பேசுவேன். இந்த அணுகுமுறைக்கு நல்ல பலன் கிடைத்தது. நமது பிள்ளைகளுக்குக் கல்வி அளிக்க, ஆசிரியர்களே வீட்டுக்கு வந்து அழைக்கிறார்களே என்று எங்கள் பள்ளியை நோக்கி வந்தார்கள்.

 
2016-ம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 270. இப்போது 408. இந்த உயர்வுக்கான மற்றொரு முதன்மையான காரணம் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையும், மாணவர்களைக் கவனித்துக்கொள்ளும் விதமும். பள்ளியில் இருக்கும்போது எங்கள் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக்கொள்வோம். ஆண்டு விழாக்களை வழக்கமான நிகழ்ச்சியாக நடத்தாமல், மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மாற்றுகிறோம். சதுரங்க விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பள்ளி முடிந்ததும் தனிப் பயிற்சி அளிக்கிறோம். அது அவர்களின் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது. ஆங்கில வழிக்கல்வியும் பள்ளியில் இருக்கிறது. ஆங்கிலச் சொற்களை எப்படி உச்சரிப்பது என்பதற்குத் தனிப் பயிற்சி அளிக்கிறோம்.

 
ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு தவறாமல் நடக்கும். மாணவர்களின் படிப்பு சம்பந்தமாக மட்டுமன்றி, பள்ளியின் வளர்ச்சி குறித்தும் பேசுவோம். பள்ளிக்கு ஏதேனும் தேவையென்றால் நிறைவேற்றுவது குறித்து பெற்றோர்களுடன் சேர்ந்து ஆலோசிப்போம். அந்த நெருக்கத்தால், கிராம மக்கள் சேர்ந்து சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களைப் பள்ளிக்குக் கல்விச் சீராக அளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்" என்கிறவர் முகத்தில் பெருமிதம் பூக்கிறது.

``இந்தப் பகுதியில் தனியார் பள்ளிகளே இல்லையா?" எனக் கேட்டால் சிரிக்கிறார்.

``4 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இருக்கின்றன. அதைத் தாண்டியே எங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் தனியார் பள்ளிகளிலிருந்து 60 மாணவர்கள் எங்கள் பள்ளியில் வந்திருக்கிறார்கள். அந்தப் பெற்றோர்களின் நம்பிக்கையை எங்களின் 10 ஆசிரியர்களும் காப்பாற்றி வருகிறார்கள். தற்போது, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கு உதவுவதாகச் சிலர் சொல்லியுள்ளார்கள். அந்தப் பணி முடித்து, அடுத்த ஆண்டு இன்னும் பல மாணவர்களைச் சேர்ப்போம்'' என்கிற ஜான் தாம்ஸ், சிறப்பான கல்விப் பணியாற்றியமைக்காக இந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் விருதுபெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான மாணவர் சேர்க்கை கொண்ட அரசுத் தொடக்கப்பள்ளி எனும் பெருமையையும் இது பெற்றிருக்கிறது.

 


பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரான செய்யது யூசுப், ``இப்படி ஒரு பள்ளியும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களும் எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் உதவியாக இருக்கும்" என்றார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.