சபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்!
தேவகோட்டை: நிவாரண நிதியாக 10 லட்சத்தை கொடுத்துவிட்டு ஓடிவிட்ட, கேரள நடிகர்கள் சங்கம் இப்போது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்ள போகிறார்கள்? கேரளத்திற்கு நம் தமிழகத்து பிஞ்சுகளின் வெள்ள நிவாரணத்தை வழங்கியுள்ளன. அதுவும் உண்டியல் குலுக்கி.
கேரளாவில் மழை அடித்து ஊற்றுகிறது. மக்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மீட்பு பணிகளும், வெள்ள நிவாரண பணிகளும் 24 மணி நேரமும் சளைக்காமல் நடைபெற்று வருகிறது. எல்லோரது கவலையும் இப்போது கேரள மக்களை பற்றிதான் உள்ளது. நிதியுதவிகள் வயது, தகுதி, மொழி, இனம் பாராமல் குவிந்து வருகிறது.
பிஞ்சுக்கரங்கள்
அது
நம் மாநிலத்துக்கு சொல்லவே தேவையில்லை. கேரளம் ஒரு அண்டை மாநிலம் என்று தள்ளி வைக்கும் இயல்பு நமக்கு கிடையாதே. பல கரங்கள் கொடுத்த நிதியில் தற்போது பிஞ்சுக்கரங்களும் இணைந்துள்ளன.
பலமுறை உதவிய மாணவர்கள்
தேவக்கோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடி சமயங்களில் இந்த பள்ளி நிதி உதவிகளை செய்துள்ளது. சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய்க்கு நிவாரண பொருட்களை வாங்கி தந்துள்ளது. அதேபோல, ஒரு நோயாளியின் உயிர்காக்க 6 ஆயிரம் ரூபாயும் இந்த பள்ளி மாணவர்கள் அளித்துள்ளனர்.
உண்டியலில் சேர்த்த பணம்
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்று வரும் மழை வெள்ளம், மக்களின் நிலை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் விளக்கமாக மாணவர்களுக்கு சொன்னார். அவர்களும் நாமும் உதவ வேண்டும் என வேண்டுகோளும் விடுத்து பள்ளியில் ஒரு உண்டியலையும் வைத்தார். அனைத்தையும் வேதனையுடன் கேட்ட பிள்ளைகள், கேரள மாநிலத்திற்கு உதவி செய்தே தீருவது என முடிவெடுத்தார்கள். அதற்காக தங்களிடம் உள்ள காசை சேர்த்து வைத்தனர். பின்பு பள்ளியில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். அந்த உண்டியல் தொகை ரூ.1000 ஆனது. அதனை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தனர்.
மாணவர்கள் பெயரில் ரசீது
பிள்ளைகளின் பணத்தை வாங்கி கொண்ட தலைமை ஆசிரியர், அத்தோடு விட்டுவிடுவாரா என்ன? தான் உட்பட மற்ற ஆசிரியர்களும் இணைந்து சுமார் 8 ஆயிரம் ரூபாயை திரட்டிவிட்டார். இப்போது மொத்தமாக அந்த பணத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண வங்கி கணக்கிற்கு ஆன்லைன் வழியாக அனுப்பியும் வைத்துவிட்டார்கள். அப்படி அனுப்பி வைத்ததற்கு, கேரள மாநிலத்தின் முதன்மை செயலரின் கையெழுத்துடன் கூடிய ரசீதும் வந்துவிட்டது. யார் பெயருக்கு தெரியுமா? பள்ளி மாணவர்கள் பெயருக்குத்தான் ரசீது வந்துள்ளது.
வாழ்த்துக்கள் குழந்தைகளே!
No comments
Post a Comment