வாட்ஸ்அப்பில் போலித் தகவல்கள்: கண்டறிய அதன் தலைமைச் செயலரிடம் மத்திய அரசு வேண்டுகோள்
வாட்ஸ்அப்பில் போலித் தகவல்கள்: கண்டறிய வேண்டுகோள்!
வாட்ஸ் அப் செயலியில் போலித் தகவல்கள் எங்கிருந்து பரப்பப்படுகின்றன என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கண்டறியுமாறு, அதன் தலைமைச் செயல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது மத்திய அரசு. உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடில், அச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பேஸ்புக்கின் ஒரு அங்கமாக விளங்கிவரும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், இன்று (ஆகஸ்ட் 21) மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவது பற்றியும், அதனை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வாட்ஸ்அப் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய சட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டுமென்று கிறிஸ் டேனியல்ஸிடம் கேட்டுக்கொண்டார் ரவிசங்கர் பிரசாத்.
“இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் வளர்ச்சி அபாரமாக இருப்பதைப் பாராட்டினேன். ஆனால் கும்பலாகச் சேர்ந்து கொலை செய்வது, பழிவாங்கும்விதமாக ஆபாசமாகச் சித்தரிப்பது போன்றவை வாட்ஸ்அப் பயன்பாட்டில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்தியச் சட்ட விதிகளுக்கு எதிரான இந்த குற்ற விதிமீறல்களுக்கு எதிரான சவால்களுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன்னர் கூறியதையும், அவரிடம் தெரிவித்தேன். நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தகவல்களைப் பரப்பும் இடத்தைக் கண்டறிய ராக்கெட் அறிவியல் தேவையில்லை. இதற்கொரு தொழில்நுட்பத் தீர்வு கண்டுபிடித்தால் போதும். இதற்கான தீர்வுகளைக் கண்டறியாவிட்டால், அது தொடர்பான குற்ற நடவடிக்கைகளை வாட்ஸ்அப் எதிர்கொள்ள நேரிடும்” என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளில் தீர்வுகளைக் கண்டறிய வாட்ஸ்அப் தயாராக இருப்பதாக, தன்னிடம் டேனியல்ஸ் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார் ரவிசங்கர் பிரசாத். போலித் தகவல்கள் குறித்த புகார்களை விசாரிக்க ஒரு அதிகாரியை நியமிப்பது, இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பை ஏற்படுத்துவது மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment