அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல்!
அரசு
பள்ளிகளில், 3,700 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடவாரியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு ஆண்டுகளாக, முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. கடந்த மாதம், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக, 1,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெற்றனர். 95 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில், 900 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதனால், அரசு பள்ளிகளில், 3,700க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இதுகுறித்து, அரசு முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பொறுத்தவரை, அனைத்து வேலைநாட்களில் பாடம் நடத்தினால் கூட, முழுமையாக முடிப்பது சிரமம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதால், ஆசிரியர்களின் வேலைப்பளு இரு மடங்காக மாறியுள்ளது. இதில், காலிப்பணியிடங்களால் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கல்வியாண்டு தொடங்கி, மூன்று மாதங்களான நிலையில், இன்னும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உடனடியாக, அவற்றை நிரப்பாவிட்டால், வரும் பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். அதேபோல், முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த ஜூனில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வில், 20 மாவட்ட ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தற்போது, காலியிடங்கள் அதிகமாகவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட மாறுதல் நடத்த வேண்டும். ஏனெனில், பதவி உயர்வு, புது நியமனத்துக்கு முன், ஏற்கனவே வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதனால், போதிய சவுகரியமின்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments
Post a Comment