Header Ads

Header ADS

ஆசிரியர் தகுதிப் படிப்பு - பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கு இனி கட்டாயம் - AICTE அறிமுகம்



பொறியியல் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கு கட்டாயச் சான்றிதழ் படிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே பணியில் இருக்கும் பேராசிரியர்களும் இந்த சான்றிதழ் படிப்பை முடித்து தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை இதற்கு முக்கியக் காரணம் என்றபோதும், பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் தரமற்ற கல்வியை வழங்குவதால் பிற வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பொறியியல் பட்ட மாணவர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
 தகுதியில்லாத பணியிடங்களுக்கு: அலுவலக துப்புரவாளர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொறியியல் கல்வியின் இந்த மோசமான நிலையை மாற்றி, தரமான மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய வகையிலான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏஐசிடிஇ எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கு கட்டாய சான்றிதழ் படிப்பை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள், இந்தச் சான்றிதழ் படிப்பை கட்டாயம் முடித்தாக வேண்டும்.


 இதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தொலைபேசி மூலம் தினமணிக்கு அளித்த பேட்டி: கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்வியின் தரம் மிக மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. இதன் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு சான்றிதழ் படிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதிலும் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, தில்லியில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


 தகுதி பெற்றால் மட்டுமே: இது அனைத்து பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கும் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரியில் புதிதாக ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், இந்த சான்றிதழ் படிப்பில் தகுதி பெற்றால் மட்டுமே சேர முடியும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இந்த சான்றிதழ் படிப்பில் தகுதி பெற்றுவிட வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது, கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தச் சான்றிதழ் படிப்பில் இடம்பெற்றிருக்கும் என்றார் சஹஸ்ரபுத்தே.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.