Header Ads

Header ADS

மாணவர்கள் எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தை எட்டிய 238 அரசுப் பள்ளிகள்!


தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த 238 அரசுப் பள்ளிகளில் தற்போது இரட்டை இலக்கத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
நீலகிரி மாவட்டத்தில் 9 பேர் மட்டுமே படித்து வந்த பள்ளியில் தற்போது 75 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 44, 214 அரசுப் பள்ளிகள் உள்ளன. நிகழ் கல்வியாண்டில் (2018-19) 877 அரசுப் பள்ளிகளில் 10 -க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
 
இதைத்தொடர்ந்து அந்தப் பள்ளிகள் மூடப்பட்டு அதில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என கூறப்பட்டது. எனினும் அந்தப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து 877 பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடக்கக் கல்வித் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வரும் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், பள்ளிகளின் ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

மேலும் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசுப் பள்ளி குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் பயனாக 877 அரசுப் பள்ளிகளில் தற்போது 238 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீலகிரியில் மாவட்டத்தில்: குறிப்பாக, நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் இடுகட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஒன்று முதல் 5 வகுப்புகளில் மொத்தம் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அந்தப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது.
 

அதே பகுதியில் உள்ள தொரையட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 8 -ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 54 -ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் வட்டம் கவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு டிவி கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 6 பேர் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நடுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெறும் 7 மாணவர்கள் மட்டுமே படித்த நிலையில் தற்போது 30 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "இதுவரை 238 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.
 
சிறு கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகள், பெற்றோரின் ஆங்கில மோகம் ஆகிய பல்வேறு தடைகளைக் கடந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துள்ளோம்.
இதை பிற பள்ளி ஆசிரியர்கள் முன்னுதாரமாகக் கொண்டு செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அதிகளவிலான மாணவர்களைச் சேர்க்க வேண்டும்' என்றனர் அவர்கள்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.