கிராமப்புறக் கல்வி சிறக்க...
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு பள்ளிக்கூடம் என்று அரசு ஏற்படுத்தியதால் பெரும்பான்மையான பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை மொத்த மாணவர்கள் எண்ணிக்கை ஓரிலக்க எண்ணில் தொடங்கி அதிகபட்சம் 25 வரைதான் இருக்கின்றன. இப்பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு உதவி ஆசிரியரும்
பணிபுரிகின்றனர்.
உதவி
ஆசிரியர் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு மொத்தம் 13 பாட நூல்களைக் கற்பிக்க வேண்டும். இதில் இரண்டு மொழிகளை எழுத்துகளுடன் அறிமுகப்படுத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர் 4, 5 வகுப்புகளுக்கு 10 பாட நூல்களைக் கற்பிக்க வேண்டும். அத்துடன் தலைமை ஆசிரியர் கூட்டம், பயிற்சி வகுப்புகள், கிராமக் கல்விக்குழு
கூட்ட ஏற்பாடு, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், கட்டடம் கட்டப்பட்டால் அதை மேற்பார்வையிட்டு பதிவு செய்தல், பல முறை ஏற்கெனவே கேட்கப்பட்ட புள்ளிவிவரங்களை இரண்டு அலுவலகங்களுக்குக் கொண்டு சேர்த்தல், விலையில்லா புத்தகம், குறிப்பேடுகள், சீருடை என ஒவ்வொன்றுக்கும் 3 முறை அலுவலகம் சென்று கொண்டுவருதல், சி.சி.இ. முறையில் மதிப்பீடுகளைப் பல பதிவேடுகளில் பதிவு செய்தல் என பள்ளிக்கூட நேரத்திலேயே தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
இத்தகைய கூடுதல் பணிகளால் தலைமை ஆசிரியரால் 10 பாட நூல்களை முழுமையாகக் கற்பிக்க முடிவதில்லை. உதவி ஆசிரியராலும் குறித்த காலத்துக்குள் 13 பாட நூல்களை முழுமையாகக் கற்றுத்தர முடிவதில்லை.
ஆரம்பப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் பெண் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் அளிக்கப்பட்டால் அந்த இடத்துக்கு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஆசிரியர்கள் எவராவது மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு என்று சென்றுவிட்டால் மாணவர்களின் நிலையும் மீதியுள்ள ஓராசிரியரின் நிலையும் அதோகதிதான்.
அரசியல் கட்சிகளின் சாதனைகளுக்காக தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக மாற்றினர். ஆனால் பெரும்பான்மையான கிராம நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்புவரை மொத்த மாணவர் எண்ணிக்கை 70 முதல் 100-க்குள் அடங்கிவிடும். இப்பள்ளிகளில் 7 முதல் 8 ஆசிரியர்கள் ஆர்.டி.இ. சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டு 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்கள் என்று மகிழ்ச்சியாகப் பணிபுரிகின்றனர்.
ஆனால் கிராமங்களில் உள்ள "அரசு உயர்நிலைப் பள்ளிகளில்' ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் படித்தாலும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அல்லல்படுகின்றனர். சில இடங்களில் "ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்' கற்பிப்பதால் பள்ளிகள் இயங்குகின்றன.
ஆர்.டி.இ. சட்டம் காரணமாக, மாணவர் இருக்கும் இடத்தில் ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர்கள் இருக்கும் இடங்களில் மாணவர்கள் இல்லை. கல்விக்காக அரசு ஒதுக்கும் பணம் இப்படி விழலுக்கு இறைத்த நீராக வீணாகிறது.
போக்குவரத்து எளிதாகிவிட்ட இந்தக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று தொடக்கப் பள்ளிகளை இணைத்து வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற முறையைக் கொண்டுவந்தால் மட்டுமே மாணவர்கள் பாட நூலில் உள்ள அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்ள முடியும். சமச்சீர் கல்வியும் வெற்றி பெறும்.
நடுநிலைப்பள்ளிகளை நீக்கி உயர்நிலைப்பள்ளிகளை அதிகமாக்கினால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமித்தால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
பள்ளிகளை ஒன்றிணைக்கும்போது மாணவர் வந்துசெல்ல போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் அல்லது மாதந்தோறும் உதவித் தொகை கொடுத்தால் போதும். மாணவர் எண்ணிக்கையும் ஆசிரியர் எண்ணிக்கையும் சரியான விகிதத்தில் அமைந்தால் கற்றல், கற்பித்தல் சீராகும்.
பல இடங்களில் எஸ்.எஸ்.ஏ. திட்டங்கள் மூலம் கட்டடங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையும் மாறும். மாணவர்களுக்குத் தேவை இலவசக் கல்விதான், இலவசத் தேர்ச்சியல்ல என்பது ஏற்கக்கூடியதே. "அசர்' கமிட்டியே அசரும்வகையில் தமிழ்நாட்டில் மாணவர் முன்னேற்றம் ஏற்பட
தமிழக அரசு இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதுதான் நல்லது.
No comments
Post a Comment