8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்டத் திருத்தத்தை அரசு ஆதரிக்கக் கூடாது'
பள்ளிகளில் 5, 8 -ஆம்
வகுப்புகளில் மாணவர்களைத் தக்க வைக்கும் (பெயிலாக்கும்') சட்டத் திருத்தத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது என தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும்,
முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐந்து, எட்டாம் வகுப்புகளின் இறுதியில் தேர்வுகள் நடத்தி மாணவரது கற்றல் திறன்களை காண வழிசெய்யும் கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அது நிறைவேறிய பின்னர் சட்டமாகும். இதில் மாணவர் தேர்ச்சி பெறத் தவறினால் இரண்டு மாதத் தனிப் பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும் இந்த மசோதா கூறுகிறது.
இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டால் ஏழ்மை, அன்றாட வாழ்க்கைப் போராட்டம், பெற்றோரின் கல்வியறிவற்ற நிலை போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள்தான் கற்றல் திறனற்றவர்கள் என வெளியேற்றப்படுவர். இந்தக் குழந்தைகள் கட்டாயக் கல்வி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டது.
பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே இந்தத் திருத்தம் தோற்கடிக்கிறது.
எனவே,
கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு ஏற்கக்கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளும், தலித், பழங்குடியினர், விளிம்பு நிலை மக்களுக்காகச் செயல்படும் அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என அதில் வசந்திதேவி கூறியுள்ளார்
No comments
Post a Comment