அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் - வசூலிக்க வழிகாட்டுதல் தேவை - உயர்நீதிமன்றம் உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, June 28, 2019

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் - வசூலிக்க வழிகாட்டுதல் தேவை - உயர்நீதிமன்றம் உத்தரவு





தமிழக அரசுத்துறைகளில் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம், ஓய்வூதியம், நிலுவைத் தொகை நிர்ணயம் தொடர்பாக கருவூலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடு செய்ய, தொகையை வசூலிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கெஞ்சம்பட்டி சுப்புராஜ் தாக்கல் செய்த மனு:பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, 1996ல் ஓய்வு பெற்றேன். சம்பளத்தை கூடுதலாக நிர்ணயித்து, அதனடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், கூடுதல் தொகையை பிடித்தம் செய்யவும் பேரையூர் உதவி கருவூல அலுவலர் 2015ல் உத்தரவிட்டார்.

எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. எனது ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு சுப்புராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு:

'குரூப் 3 மற்றும் 4 ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது ஓய்வூதியம் கூடுதலாக நிர்ணயித்து வழங்கியிருந்தால், அத்தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் பிடித்தம் செய்யக்கூடாது. கூடுதல் சம்பளம், ஓய்வூதியம் நிர்ணயித்ததில் தவறு செய்த அலுவலர்களை அதற்கு பொறுப்பாக்கி, அவர்களிடம் தொகையை வசூலிக்க வேண்டும்,' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுபோன்ற விவகாரத்தில் கீழ்நிலை ஊழியர்களின் பரிந்துரையில் மாவட்ட அளவிலான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையெழுத்திடுகின்றனர்.

மாவட்ட அதிகாரிகளை, சில கீழ் நிலை ஊழியர்கள் தவறாக வழி நடத்துகின்றனர். சில அலுவலர்கள் கூட்டுச்சதி செய்து கூடுதல் சம்பளம் நிர்ணயிப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. சம்பள நிர்ணயத்தில் தவறு நடந்தது தணிக்கையின்போது கண்டறியப்படுகிறது.கூடுதலாக நிர்ணயித்து வழங்கிய தொகையானது மக்களின் வரிப்பணம். அதை அரசு அதிகாரிகள் சரியாக செலவிட வேண்டும்.

அதில் இழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.மனுதாரருக்கு தற்போது வயது 81. தொகையை ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யும் நடவடிக்கையால், அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கும். அவரிடம் தொகையை வசூலிக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.விதிகள்படி மனுதாரருக்கு சரியான சம்பளம், ஓய்வூதியத்தை நிர்ணயிக்க வேண்டும். மனுதாரருக்கு கூடுதலாக சம்பளம் நிர்ணயித்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். தவறிழைத்த, கவனக்குறைவாக நடந்து கொண்ட அலுவலர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர்களிடமிருந்து தொகையை வசூலிக்க வேண்டும்.கூடுதல் சம்பளம், ஓய்வூதியம், நிலுவைத் தொகை நிர்ணயம் தொடர்பாக கருவூலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடு செய்ய, தொகையை வசூலிப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை அனைத்துத்துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments: