கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 18, 2018

கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!


கடன் வாங்கும் முன், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம்
கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும்.




கடன் வாங்கும் சூழல் ஒருவருக்கு எப்போது, எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் கட்டணம், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், குடும்பத்தில் யாராவது திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விபத்து போன்ற பல விஷயங்களுக்காக பணத்தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய சூழலில் கையில் பணம் இல்லாதபோது செலவுகளைச் சமாளிக்க, பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ, சிறிதோ கடன் வாங்கி, அப்போதைய அவசரத்தைச் சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாகிவிட்டது.



கடன்

இத்தகைய சூழலில், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அவர்கள்  கூறும் சில ஆலோசனைகள் இங்கே...

 à®•à®Ÿà®©à¯
1) குறுகிய காலக் கடன்கள்

ஓராண்டு காலத்துக்கும் குறைவான கால அவகாசத்தில் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையிலான கடன்கள் மற்றும் தற்காலிகப் பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வாங்கப்படுவது குறுகிய காலக் கடன்கள். இவை பொதுவாக, ஜாமீன் எதுவும் இல்லாததாக இருக்கும். என்றாலும், லோன் வாங்குபவர்களின் நடத்தை, கடந்த காலங்களில் வாங்கிய கடனை அவர் உரிய காலத்தில் தாமதமின்றித் திருப்பிச் செலுத்தினாரா, தொகை உள்ளிட்ட இதர அம்சங்களைக் கருத்தில் கொண்டு கடன் கொடுக்கும் நிறுவனம், கடன் வாங்குபவரிடம் பிணையம் (collateral security) ஏதும் வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யும்.


2) எது குறுகிய காலக் கடன்?

தனிப்பட்ட தேவைகள் மற்றும் பிசினஸ் தேவைகளுக்காகக் குறுகிய காலக் கடன்களைப் பெறலாம். சம்பளத் தேதி கடன் (payday loan), நுகர்வோர் கடன், விடுமுறை காலக் கடன் எனத் தனிப்பட்ட தேவைகளுக்கான லோன் பல வகைகளில் கிடைக்கின்றன. மாதச் சம்பளம் கிடைப்பதில் தாமதம், திடீர் பணநெருக்கடி அல்லது பணப் பற்றாக்குறை, ஏதாவது ஒரு மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏற்படும் அதிகச் செலவு போன்றவற்றைச் சமாளிக்கக் குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் வாங்கப்படுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

குறுகிய காலக் கடன் என்பது நமக்கு வசதியான கால அவகாசத்தில் திருப்பிச் செலுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. பிசினஸ் தேவைக்காகக் கடன் தேவை எனில், உங்கள் பிசினஸின் வரவு-செலவுக் கணக்கின் அடிப்படையில் பிணையம் ஏதுமின்றியே உங்களுக்குக் கடன் கிடைக்கும்.


3) என்ன தகுதி வேண்டும்?

இன்று நம்மிடையே வேகமாகப் பிரபலமாகி வரும் லோன்களில் ஒன்று பேடே லோன். தற்காலிகமாக உங்களுக்குப் பணத் தேவை என்றாலோ அல்லது உங்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பதில் தாமதம் என்றாலோ, இந்த வகையான லோன்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இந்தக் கடனை வாங்கும் ஒருவர், தனக்குச் சம்பளப் பணம் கிடைத்தவுடன், தான் வாங்கிய தொகை / அதன் பகுதி மற்றும் அதற்கான கட்டணம், வட்டி ஆகியவற்றைக் கட்ட வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்து எளிதாக வாங்க முடிகிற கடன் வகைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கடனைப் பெற விண்ணப்பம் செய்தால், தகுதி இருக்கும்பட்சத்தில், சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.




திடீர் மருத்துவச் செலவு, திடீர் பயணம் போன்ற தருணங்களில் உங்கள் சம்பளம் வருவதற்குத் தாமதமாகும் சமயத்தில் இந்த வகையான கடன்கள் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும். இந்த வகையான கடனைத் தர பல்வேறு தனியார் கடன் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும், இதுபோன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக (ஆண்டுக்கு 20% - 40% வரை) இருக்கும். எனவே, இந்த வகையான கடன்களை வாங்கும்முன், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை மனதில்கொள்வது நல்லது.

தொழில் லோன்

4) சிறு தொழில் கடன்

சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு (SME)) ஏற்படும் தற்காலிகப் பணத் தேவைகளுக்கு, அவர்களது தொழில் வரவு- செலவு கணக்கின் அடிப்படையில் கடன் வழங்க, பல்வேறு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை உள்ளன. பொதுவாக, கடன் கேட்கும் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும்முன், அந்த நிறுவனங்களின் கடந்த மூன்றாண்டுக் கால வருமான வரித் தாக்கல் கணக்கு (ITRs) விவரம், பேலன்ஸ்ஷீட், லாப நஷ்டக் கணக்கு விவரம் போன்றவற்றைப் பார்த்துவிட்டுத்தான் கடன் வழங்கப்படும். ஒருவேளை, கடன் தொகை பெரிதாக இருந்தால், கடன் கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் பிணையம் கேட்கும்.


பொதுவாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள், கடன் கேட்பவரின் கிரெடிட் ஸ்கோர், இரண்டாண்டுக் கால வருமான வரிக் கணக்கு தாக்கல், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்றவற்றைப் பார்த்து, திருப்தியடைந்த பின்னர்தான் கடன் வழங்கும். குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இருப்பினும், குறைவான கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கும் சில தனியார் நிறுவனங்கள், அதிக வட்டியில் கடன் வழங்க முன்வருகின்றன.

5) அவசரக்கடன்

* உங்களுக்கு மிகவும் அவசரமாகக் கடன் தேவையெனில், முதலில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் கேட்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

* பர்சனல் லோன் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வங்கியுடன் உங்களுக்குள்ள உறவைப் பொறுத்து, 30 நிமிடங்கள் முதல் மூன்று தினங்களுக்குள் நீங்கள் அதைப் பெற்றுவிட முடியும்.



* கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, உங்களது கடன் வரம்பில் 40-80 சதவிகிதத் தொகையை .டி.எம் மூலம் நீங்கள் எடுக்க முடியும். தினமும் பணம் எடுப்பதில் இடைவெளி இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான வங்கிகள், வரம்புக்கு மேலும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. அதே சமயம், வரம்புக்குமேல் பெறும் கடனுக்கு, வழக்கமான வட்டியைவிட அதிகமான வட்டி விதிக்கப்படும்.

*உங்களுக்கு ஏற்கெனவே வீட்டுக் கடன் இருந்தால், அதைப் பயன்படுத்தி அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கு அல்லது உங்களது வீட்டுக் கடனின் அசல் தொகையைத் திரும்பக் கட்டிமுடிக்கும் வரைக்குமான காலத்துக்கு ரூ.50 லட்சம் வரைக்கும் நீங்கள் டாப்அப் லோன் பெறலாம்.

 

கிரெடிட் கார்டு லோன்

* உங்களுக்குச் சொந்தமாக வீடு இருந்து, மிகப் பெரிய தொகை தேவைப்படும்பட்சத்தில் நீங்கள் அந்தச் சொத்தின் பேரில் லோன் வாங்கலாம். உங்கள் வீட்டின் மதிப்பைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை பெற முடியும். திருப்பிச் செலுத்தும் காலம் 2 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும். சொத்து மதிப்பில் 65% வரை கிடைக்கும்.

* அதேபோன்று தங்கத்தின் மதிப்பில் 60% வரை லோன் கிடைக்கும். வங்கிகளில் ரூ.10,000 முதல் ரூ.25 லட்சம் வரை பெற முடியும். மேலும்  பங்குப் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள், வைப்புநிதி பத்திரங்கள் மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஈடாக வைத்துப் பெறலாம். ஷேர்கள் மற்றும் ஃபண்டுகளுக்கு அதன் மதிப்பில் 50 சதவிகிதமும், வைப்பு நிதிக்கு அதன் மதிப்பில் 75 சதவிகிதமும் வங்கிகள்  தரும்.

 

6) மறக்கக்கூடாதவை!

உங்களது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படும் பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான ஒரு கருவியாகவே குறுகிய காலக் கடனை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், அந்தக் கடனை வாங்கும்முன் அதை எப்படித் திருப்பிச் செலுத்தப்போகிறோம் என்பதற்கான திட்டத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற கடன்களை உரியக் காலத்தில் திருப்பிச் செலுத்தாமல் போனால், அது உங்களின் கிரெடிட் ஸ்கோரைப் பாதிப்பதோடு, அதிகமான தொகையை அபராதமாகவும் செலுத்த நேரிடும். எனவே, அத்தகைய நிலையைத் தவிர்ப்பது நல்லது.

No comments: