5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்-அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 16, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்-அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


Image result for public exam


ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு 2019-20 கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு..ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மு.. ஸ்டாலின்:

தமிழகத்தில் ஐந்து,  எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அவசர ஆணையை தமிழக அரசு பிறப்பித்திருப்பதற்கு திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்களுக்கு பொதுத்  தேர்வு வைத்து, அதன் மூலம் அவர்களை தோல்வியடையச் செய்து, ஆரம்பக் கல்வி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழ்நிலையையும், அவர்கள் படிப்பதையே வெறுத்து அந்தக் கல்வியை விட்டு விலகி, குலக் கல்விக்குத் திருப்பி அனுப்பும் தந்திரத்தையும் மத்திய - மாநில அரசுகள் கூட்டாகக் கடைப்பிடிக்கின்றன. இது அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

ஏற்கெனவே 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இருக்கும் நிலையில், இப்போது 5, 8- ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தையும் விரக்தியையும்  உருவாக்கி, அவர்களின் உடல் நலத்தையும் பாதித்துவிடும்.
எனவே, மாநிலப் பாடத் திட்டத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற அரசாணையை  தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

 குழந்தைகளின் நலன் கருதி பல்வேறு விவாதங்களுக்கு பிறகு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.  குழந்தைகள் அச்சம், அதிர்ச்சி, பதற்றம் ஆகியவை இல்லாமல் தங்களை மிக இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ள உதவுவதே கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம். அத்தகைய நோக்கத்தின் அடிப்படையில்தான் எட்டாம் வகுப்பு முடியும் வரை பொதுத்தேர்வு கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
தேர்வு வைத்தால்தான் ஒரு குழந்தை பயிலும் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. அவ்வாறு எந்த ஆய்வும் கூறவில்லை. மாறாக, தேர்வு என்பது குழந்தைகள் இடைநிற்றலை அதிகரிக்கும் என்பதே அனுபவம். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தேர்வு முறை கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்வது, கல்வி மீது ஆர்வமிழப்பையும், இடைநிற்றலையும் அதிகரிக்கும். எனவே, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி (பாமக):

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு வலிமையான பள்ளிக் கல்வி  கட்டமைப்பும் முக்கியக் காரணம் ஆகும். பெருந்தலைவர் காமராஜர் முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர்  வரை முதலமைச்சர்களாக இருந்தபோது மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச கல்விக் கருவிகள் போன்றவற்றை வழங்கி தான் பள்ளிக்கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தினர். அதை 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்து சிதைத்து விடக் கூடாது. கிராமப்புற மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடத்தும்  முடிவை கைவிட வேண்டும்.  அதற்கு மாறாக 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் திட்டத்தை அரசு தொடர வேண்டும்.

தொல்.திருமாவளவன்(விசிக):

பள்ளிக்கல்வியில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்கள் திறனை மேம்படுத்துவதாக இல்லாமல், மேல்படிப்புக்குச் செல்லவிடாமல் அவர்களை வடிகட்டும் விதமாக அமையும்.  குறிப்பாக, கிராமப்புற மாணவர்களை 5 ஆம் வகுப்பிலேயே வெளியேற்றும் முயற்சியாகும். அதற்கு தமிழக அரசு துணை போகிறது. இது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவும்  உள்ளது. தேசிய அளவில் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டும்.

No comments: