5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் ( முழு விவரம் ) - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, February 20, 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் ( முழு விவரம் )



5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2019 ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். 1,2,3 ஆம் பருவ பாடங்களிலிருந்து பொதுவான வினாக்கள் கேட்கப்படும். குறுவள மைய அளவில் மதிப்பீடு செய்யப்படும்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

 இதற்கு நீண்டநாளாக எதிர்ப்பு தெரிவித்துவந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.
 
5 மற்றும் 8-ம் வகுப்பின் மூன்றாவது பருவத் தேர்வையே பொதுத்தேர்வாக மாற்றி நடத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித் துறை.

 இதற்கான கேள்வித்தாளைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது அரசுத் தேர்வுத் துறை.

5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் கேள்வித்தாளில் வார்த்தை விளையாட்டுகள், கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழிசார்ந்த அடிப்படை விஷயங்களைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகளும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும்.

8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவில் கேள்வித்தாளை அமைக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இரண்டு வகுப்புகளுக்கும் கேள்வித்தாள் 50 மதிப்பெண்கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண், பிறகு  100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்பட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளது பள்ளிக்கல்வித் துறை
 
தேர்வு மையங்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது  பள்ளிக்கல்வித் துறை. இந்தக் கடிதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மற்றும் 8 ம் வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தொகுத்து வழங்கவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20-க்கும் குறைவில்லாமல் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான மையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறைந்த மாணவர்கள்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தூரத்துக்குள் போக்குவரத்து வசதிகள் எளிதாக இருக்கும் வகையில் தேர்வு மையங்களை அமைக்கும் வகையில் செயல்படவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

``அனைவருக்கும் இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ், 6 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களைப் பள்ளியில் எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முறையால் தடை ஏற்படுத்தாமல் படிப்பதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படுத்தியிருப்பது கவலைக்குரிய விஷயம்.

ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் பொதுத்தேர்வு நடத்துவதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையவே செய்யும்.

 குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும்" என்கின்றனர் கல்வியாளர்கள்.

இதற்கு மத்திய அரசு, ``5 மற்றும் 8 ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்வார்கள்
 
. தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டு மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே தொடர்ந்து அதே வகுப்பில் படிக்கவேண்டியிருக்கும்'' எனத் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு, அமைச்சரவை கூடி முடிவுசெய்யும்" என்று அறிவித்துள்ளார்.

 இதனால், பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களின் சேர்க்கை குறையுமா அல்லது கல்வியின் தரம் கூடுமா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி: விகடன்

No comments: