நான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா?" ஆசிரியை ஆதங்கம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, January 20, 2019

நான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா?" ஆசிரியை ஆதங்கம்!



சமீபத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் ஒரு முடிவு, ஆசிரியர்கள் மத்தியில் பலத்த அதிர்வையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையங்களைப்  பள்ளியோடு இணைத்து, கேஜி வகுப்புகள் தொடங்கும் அரசின் திட்டத்திற்கு புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், உபரி ஆசிரியர்களை அங்கு  பணி மாற்றம் செய்யவிருக்கிறது அரசு.

இதனால், பலரும் பாதிக்கப்படுவதாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். பாதிக்கப்படும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பேசினேன்.
 
"இந்தத் திட்டத்தில், உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்துவதாகக் கூறியிருந்தார்கள். ஆனால், என்னையும் அங்கன் வாடிக்கு மாற்றியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் பள்ளியில் 40 + மாணவர்கள், என்னையும் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள்தான்.

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே அரசின் கணக்கு. அப்படியெனில், நான் எப்படி உபரி ஆசிரியராவேன். நான் மட்டுமல்ல, கறம்பக்குடி ஒன்றியத்தில் ஒரேயொரு உபரி ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். ஆனால், 12 ஆசிரியர்கள் இந்தப் பணி மாறுதலுக்கு உள்ளாகியுள்ளனர். அது எப்படி?

சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய ஆசிரியர் தேர்வில் போட்டிபோட்டு, சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வாகி வந்தோம். இப்படி சிரமப்பட்டு வந்தது, அங்கன்வாடிக்குச் செல்லத்தானா? மேலும், கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி முறை என்றும் சொல்கிறார்கள்.

 
 எனவே, அந்தக் குழந்தைகளைக் கையாளும் விதங்களை நாங்கள் படிக்கவில்லை. எங்களைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றப்போவதாகவும் தகவல்களைக் கேள்விப்படுகிறோம் . இது எங்களின் பணி உயர்வு, இடம் மாறுதல் உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும். இதெல்லாம் யோசிக்கையில் மனச்சோர்வாகிறது.

நான் அங்கன்வாடி மையத்துக்குப் போய்விட்டால்,  என் வகுப்பை யார் கவனிப்பார்கள்? ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள 47 மாணவர்களை ஒரு ஆசிரியரால் எப்படிக் கையாள முடியும்?
 
 ஒருவேளை என் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தால், அதை எப்படி எடுத்துக்கொள்வது? அந்த வேலைக்குத் தகுதியுடையவர் என்றுதானே என்னைத் தேர்வுசெய்தார்கள். பி.ஜி முடித்து, பி.எட் படித்த என் கல்விக்கு என்ன மதிப்பு?" என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார்.

No comments: