உலக கை கழுவும் தினம்- விளக்கப்படங்களுடன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 15, 2018

உலக கை கழுவும் தினம்- விளக்கப்படங்களுடன்





கை கழுவிட்டு படிங்க -  இன்று உலக கை கழுவும் தினம்!
 
தொலைதூரம் கடந்துபோய்,

தூய பசும்பாலை வாங்கி,

துருபிடித்த பாத்திரத்தில் வைப்போமா... எவ்வளவு தூய்மையாக வைத்துக்கொள்வோம்.

அதுபோன்றதுதான் உயிரெனும் பசும்பாலை உடலெனும் பாத்திரத்தில் வைத்திருக்கும் போது தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடல் தூய்மை, உடல் ஆரோக்கியம் ஆகிவையே நம்மை மேலும் மெருகூட்டி மன நிம்மதியோடு இருக்க வைக்கும்.

ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டும், உடல்தூய்மையையும் பேணிக்காப்பதுமே நோயற்ற வாழ்வளித்து நம்மை வளமாக்கும்.

எவ்வளவுதான் நாம் சுத்தமாக இருந்தாலும்,

எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் பரப்பும் கிருமிகள் தொற்று ஏற்பட்டுவிடுகிறது. அன்றே முன்னோர்கள் வெளியே சென்று வந்த பிறகு, வீட்டு முற்றத்தில் இருக்கும் தண்ணீரில் கைகால்களை கழுவி தூய்மைப்படுத்திக்கொண்டு உள்ளே செல்வார்கள். அந்த ஆரோக்கியம்தான் அவர்களை 100 வயதுவரை வாழவைத்தது.

இதுபோன்ற சின்னசின்ன விஷயங்கள்தான் பெரிய நற்பலன்களை தரவல்லதாக அமைகிறது.

இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும்முறைதான் முதன்மையாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதியவிழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும்நாடுகள்தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம்கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்குநோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகசுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம்கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியானமுறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.

நம் வாசகர்களுக்கு, கைகழுவும் தினம் பற்றிய விழுப்புணர்வு தகவல்களை மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் சசித்ரா தாமோதரன் கூறியபோது,

கைகளைக் கழுவுதல் ஒரு சிறிய செயல் தான்.. ஆனால் அதனால் உண்டாகும் பலன்கள் பெரிது..!

காலரா, டைஃபாய்ட், மஞ்சள் காமாலை, அமீபிக் வயிற்றுப் போக்கு மட்டு்மன்றி நிமோனியா போன்ற நோய்கள் கைகளால் பரவுகின்றன.

Influenza, Ebola ஆகிய வைரஸ் கிருமிகளும் கைகளால் பரவ வாய்ப்புண்டு.

இந்தியாவில் கைகளைக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் வருடந்தோறும் 1.4 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவால் இறக்க நேரிடுகிறது..

கை கழுவுதல் மட்டுமே வயிற்றுப்போக்கு ஏற்படுவதை 31%ஆம், நிமோனியா வருவதை 21%ஆம் தவிர்க்கிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு..



எப்போதெல்லாம் கைகளை சுத்தமாகக் கழுவுவது மிகவும் அவசியம்?

கழிவறை சென்று வந்த பிறகு...

குழந்தைகளை சுத்தம் செய்த பிறகு...

உணவு உண்ணும் முன் அல்லது குழந்தைக்கு உணவு ஊட்டும் முன்...

உணவு சமைக்கும் முன்...

செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு...

குழந்தைகள் கைகளை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வார்கள். அதனால் விளையாடிய பிறகு...

குழந்தைக்கு உடை மாற்றிய பின்...

நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிச் செல்லும் முன்...

மருத்துவமனையில் நோயாளியைப் பார்த்து விட்டுத் திரும்பிய பிறகு...

சாப்பிடப் போகும் முன் தண்ணீரில் கையை நனைத்துவிட்டுச் செல்வதற்குகை கழுவுவதுஎன்று பெயர் இல்லை. குறைந்தது 30 வினாடிகளாவது கழுவவேண்டும்.. வலது கையின் பின்புறத்தின் மேல் இடது உள்ளங்கையை வைத்து விரல்களோடு கோர்த்தபடி, விரல்களின் இடுக்குகளில் தேய்க்க வேண்டும். இதே முறையில் இடது உள்ளங்கையின் பின்புறத்தின் மேல் வலது கையை வைத்து விரல்களின் இடுக்குகளில் தேய்க்க வேண்டும்.

உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாகக் கோர்த்தபடி தேய்க்க வேண்டும்.

கஷ்டப்பட்டுக் கழுவிய கையால் பைப்பை மூடாதீர்கள். துண்டைப் பயன்படுத்திக் குழாயை மூடுங்கள். இப்போதுதான் உங்கள் கைகள் பாதுகாப்பானதாக இருக்கும்.

சோப் கொண்டு கைகளைக் கழுவுவது தான் சிறந்தது.. அதிக ரசாயனம் கலந்த சோப்பை பயன்படுத்தக்கூடாது.

சோப் அல்லது தண்ணீர் இல்லாத சமயங்களில் Hand sanitizerகளை பயன்படுத்தலாம்.. ஆனால் அவற்றில் 60% ஆல்கஹால் அளவு இருப்பது அவசியம்.

செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்திய கைகளை கழுவாமல் சாப்பிடக் கூடாது. வெறும் தண்ணீரால் கைகளை கழுவுவதில் பயன் இல்லை. கிருமிநாசினி அவசியம். வெளியிடங்களில் கழிவறைகளுக்கு அருகில் இருக்கும் முதல் குழாயையே பலரும் பயன்படுத்துவார்கள். அதனால், அடுத்தகுழாயைப் பயன்படுத்துங்கள்.

கழுவிய கையால் குழாயை மூடக் கூடாது என்பதற்காகவே, கை காட்டியவுடன் நீர் வரும் குழாயை ஹோட்டல்கள் போன்ற இடங்களில் வைத்திருக்கிறார்கள். நாம் ஆரோக்கியக் குறைவோடு இருப்பது நாம் அதிகம் நேசிக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சிரமத்தைத் தரும் என்பதைமறக்க வேண்டாம். குழந்தைகளுக்கு வரும் உடல்நலக்குறைவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கும் கைகளின் சுகாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

"நமது கைகளில் நமது எதிர்காலம்..!" 2017ஆம் ஆண்டின் கைகளைக் கழுவும் நாளுக்கான முழக்கம் இது.

வாழ்ந்திட கரங்களில் தொடங்கிடும் இந்த தூய்மை நல்மனங்களை நல்கிடும்

கரங்கள் தொடங்கி மனங்கள் வரை தூய்மையாக வைத்திருப்போம்.

சுகாதாரமான ஆரோக்கியமான மன நிம்மதியான வாழ்வுதனை வாழ்ந்திடுவோம் என்று கூறினார் மகப்பேறு சிறப்பு மருத்துவர், டாக்டர் சசித்ரா தாமோதரன்.

#October15 #GlobalHandwashingDay

No comments: