அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரடி- உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 30, 2018

அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரடி- உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம்.


அக்டோர் 4ம் தேதி விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு  சம்பளம் உள்ளிட்ட எந்த அலவன்சும் வழங்கப்படாது என்று தமிழக தலைமை  செயலாளர் உத்தரவிட்டுள்ளார்இது அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை  மீண்டும் கொண்டு வர வேண்டும், மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு 1.1.16 முதல் வழங்கும்  வகையில் உடனடியாக மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். மாநில அரசின் 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கு முன்னதாக,  இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் வழங்க வேண்டும்.

1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தைத்  தொடர்வதற்கான பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பரிந்துரையில் சேர்த்து, விரைவில் முதல்வரிடம்  வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

 இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் அக்டோபர் 4ம் தேதி ஒரு  நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது, அக்டோபர் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது,   அக்டோபர் 19ம் தேதிமுதல் 23ம் தேதி வரை காலவரையற்ற போராட்டம் குறித்து பிரசாரம் மேற்கொள்வது, நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை  நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து  அக்டோபர் 4ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டதில் பங்கேற்குமாறு அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் தற்போது அழைப்பு விடுத்து  வருகின்றன. இதற்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் காணப்படுகிறது. இந்தநிலையில், போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தமிழக அரசு  அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது.  இது தொடர்பாக பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர் சங்கங்கள்  அறிவித்துள்ளன. ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு  ஊதியம் வழங்கப்படாது. 


 
இவ்வாறு  தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அன்றைய தினம் அனைத்து அலுவலகவருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க  வேண்டும்.

பின்னர் அதை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். எனினும் உரிய காரணங்கள் இருப்பின்  உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
* ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம்  வழங்கப்படாது.

* அக்டோபர் 4ம் தேதி அனைத்து அலுவலகவருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்.

* உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம்.

No comments: