தற்போதுள்ள நிதி நிலையின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 27, 2018

தற்போதுள்ள நிதி நிலையின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்



தற்போதுள்ள நிதி நிலையின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பகுதிநேர ஆசிரியர் என்பது இரண்டு முறையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று சிறப்பாசிரியர்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மூலம் முதல் கட்டமாக மாத ஊதியமாக ரூ.5,000 வழங்கப்பட்டது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இரண்டு மணி நேரம் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

பணி மாறுதல் பெற...இதையடுத்து கூடுதலாக சம்பள உயர்வு வேண்டும் எனக் கேட்டபோது படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ. 7, 700 வழங்கப்பட்டு வருகிறது. பகுதி நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணிமாறுதல் செய்துகொள்ள அவர்கள் இடம்பெற்றுள்ள சங்கங்களின் மூலமாக மனு அளிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறோம். அந்தப் பணிகள் நிறைவு பெறும் சூழ்நிலையில் உள்ளது.

நிதி நிலை காரணமாக...பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு மத்திய அரசு நிதி தருகிறது. இவர்களை பணியில் அமர்த்தும்போது பணி நிரந்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறித்தான் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பணி வழங்கப்பட்டது. தற்போது உள்ள நிதி நிலையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. போராட்டம் நடத்துபவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதுள்ள நிலையை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மாணவர்கள் உதவி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 172 பேர் எங்களை அணுகியுள்ளனர். அவர்களுக்கு பணிகளை மேற்கொள்ளஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. முறையாக ஆசிரியர் காலிப்பபணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை இரண்டு மாதத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்திய அரசின் நிதியை பெற முதல்வரின் உறுதுணையுடன்6 மாதங்கள் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

100 நூலகங்களில் வைஃபை வசதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் 100 நூலகங்களில் வைஃபை வசதியை இலவசமாக ஏற்படுத்தித் தர ஏசிடி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கையெழுத்தானது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:

நான்கு மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஏசிடி நிறுவனத்தின் பெரு நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்புத் திட்டத்தின் (சிஎஸ்ஆர் ஃபண்ட்) மூலம் இலவசமாக வைஃபை வசதி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டங்களில் உள்ள 100 நூலகங்கள் பயன் பெறும். இதனால், நூலங்களில் படிப்பவர்களின் அறிவுத் திறன் மேம்படும். மாணவர்கள் போட்டித் தேர்வு எழுத உறுதுணையாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் யு-டியூப் மூலம் சுமார் 20,000 மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றார்

No comments: