அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 26, 2018

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்


அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் அரசு தொடக்க பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் ஸதி பேட்டியளித்துள்ளார்.

 

நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி கவுர வித்து வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர்கள் இணையதளம் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விணப்பித்தனர். அவர்களின் சேவை அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கான நேர்காணலுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.

இதில் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.ஸதி என்பவர் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுகுறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-நான் 23 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணி புரிகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் இங்கு வந்த போது 146 மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வந்தனர். எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெரு தெருவாக சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி கற்பதன் பயன் ஆகியவற்றை எடுத்துக் கூறினேன்.

இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தற்போது எங்கள் பள்ளியில் 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் டேப்லெட் மூலம் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளியில் பல்வேறு வசதிகளை செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறேன்.

இந்த பள்ளி கோவை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்றேன். இதே பள்ளிக்கு தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவித்தது.

மலுமிச்சம்பட்டி ஊராட்சியைதிறந்த வெளியில் மலம் கழிப்பிடமற்ற ஊராட்சியாகமாற்ற இப்பள்ளி மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக 10 மாணவர்களுக்கும், எனக்கும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் விருது வழங்கி பாராட்டினார். இது போன்ற பல்வேறு அம்சங்களை பார்த்து தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இது போன்ற விருதுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்.இந்த விருதை அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறோம். நாங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறோம். அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: