ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, August 31, 2018

ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது


நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி
கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், மத்திய அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு, மாநிலம் முழுவதும், 369 பேருக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
 
இந்த விருதை பெற, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின், கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி நேரத்தில், 'கட்' அடித்து விட்டு, வகுப்பு நடத்தாதவர்கள்; பள்ளி கல்வி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் உள்ளிட்ட, பல்வேறு பிரிவினரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கானோரை தேர்வு செய்யும் இறுதிகட்ட பணியில், மாநில கமிட்டி ஈடுபட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் ஆலோசனைப்படி, திறமையான, மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஒழுக்கமாக திகழும் ஆசிரியர்களை மட்டுமே, விருதுக்கு தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக, அவர்களின் வீடு, பணியாற்றும் பள்ளி உள்ள பகுதி போலீசாரிடம், கட்டாயம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும், ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள்,புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என்பதை, எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். விசாரணை நடத்தப்படாத ஆசிரியர்களின் பெயர், விருது பட்டியலில் இருக்கக் கூடாது என, விருது தேர்வு கமிட்டிக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments: