உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது?: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, August 7, 2018

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது?: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்!


சென்னை : 'மறுவரையறைக்கு பின், இடஒதுக்கீடுக்கான அறிவிப்பாணை வெளியிட்ட தேதியில் இருந்து, மூன்று மாதங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. அதில், 2017 நவம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி, உத்தரவிட்டிருந்தது; இதற்கான அறிவிப்பை, செப்டம்பரில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது.



தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர், மாலிக் பெரோஸ் கான், செயலர் ராஜசேகருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். இந்த வழக்கில், அதிகாரிகள் இருவரும், நீதிமன்றத்தில் ஆஜராகினர்; வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையர், மாலிக் பெரோஸ் கான் தாக்கல் செய்த அறிக்கை:

தொகுதி மறுவரையறைக்கான கமிஷன், பணிகளை முடித்து, வரும், ௩௧ம் தேதி, அரசுக்கு பரிந்துரை அனுப்பும். இந்தப் பரிந்துரையை ஏற்று, அறிவிப்பாணையை, அரசு வெளியிட வேண்டும். அதன்பின், ஆறு வாரங்களுக்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்களுக்கான வார்டுகள் ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை, மறுவரையறைக்கான கமிஷன் அனுப்பும். இதன் அடிப்படையில், ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பாணையை அரசு வெளியிட வேண்டும்.

வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக, மறுவரையறைக்கான கமிஷன் பரிந்துரையை ஏற்று, அரசு அறிவிப்பாணையை வெளியிட்ட தேதியில் இருந்து,
மூன்று மாதங்களில், தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''வேண்டுமென்றே தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில், மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகினர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரிக்கும் என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

No comments: